Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐந்தாவது ஆண்டாக நீடிக்கும் போர்! வீரர்கள் பற்றாக்குறையில் உக்ரைன்

ஐந்தாவது ஆண்டாக நீடிக்கும் போர்! வீரர்கள் பற்றாக்குறையில் உக்ரைன்

ராணுவச் சேவையைத் தவிர்ப்பதும், அனுமதியின்றி படைப்பிரிவுகளை விட்டு வெளியேறுவதும் ஆள் சேர்ப்பை பாதித்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

ரஷ்யாவுடனான போர் ஐந்தாவது ஆண்டாக நீடிக்கும் நிலையில், உக்ரைன் ராணுவம் கடும் வீரர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. ட்ரோன் தொழில்நுட்பத்தில் முன்னேறியிருந்தாலும், போர்முனையில் கிடைக்கும் சாதகமான வாய்ப்புகளைப் பயன்படுத்த போதிய வீரர்கள் இல்லை என தளபதிகள் கூறுகின்றனர்.

சில படைப்பிரிவுகள் பாதி எண்ணிக்கையிலான வீரர்களுடன் செயல்படுகின்றன. தற்போது வசமுள்ள பகுதிகளைப் பாதுகாக்கவே ஆட்கள் போதவில்லை என்றும், கூடுதல் பகுதிகளை நோக்கி முன்னேறினால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றும் போக்ரோவ்ஸ்க் பகுதியில் பணியாற்றும் துணைத் தளபதி அஃபர் தெரிவித்தார். மாற்று வீரர்கள் கிடைக்காததால், சிலர் ஓராண்டு வரை போர்முனையில் தொடர்ந்து பணியாற்றுகின்றனர். போதிய ஓய்வு கிடைக்காமல் அவர்கள் சோர்வடைந்துள்ளனர். இது உயிரிழப்புகள் அதிகரிக்கவும் காரணமாகிறது என பிரிட்டனைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை ஆய்வாளர் நிக் ரெனால்ட்ஸ் கூறினார்.

ராணுவச் சேவையைத் தவிர்ப்பதும், அனுமதியின்றி படைப்பிரிவுகளை விட்டு வெளியேறுவதும் ஆள் சேர்ப்பை பாதித்துள்ளன. சுமார் 20 லட்சம் ஆண்கள் சேவையைத் தவிர்ப்பதாகவும், 2 லட்சம் வீரர்கள் பணியிலிருந்து விலகியுள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார். போரால் ஏற்பட்ட இடப்பெயர்வு, வெளிநாடுகளுக்குக் குடியேறுதல் ஆகியவற்றால் ராணுவத்தில் சேர தகுதியான ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ராணுவத்தில் சுமார் 10 லட்சம் பேர் இருந்தாலும், அவர்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே நேரடியாகப் போர்முனையில் நிறுத்தப்பட்டுள்ளனர் என அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


புதிய வீரர்களைச் சேர்க்கவும், பயிற்சியை மேம்படுத்தவும் பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. காலாட்படையில் சேருவோருக்கு அதிக ஊதியம், நிர்ணயிக்கப்பட்ட பணிக்காலம் வழங்கும் முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை பலனளிக்கக் காலம் தேவைப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆட்களைச் சேர்ப்பதுடன், அவர்களை முறையாகப் பயன்படுத்துவதும் அவசியம் என ராணுவ ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். போதிய பயிற்சி இல்லாதது, மோசமான நிர்வாகம், பணிக்காலம் எப்போது முடியும் என்ற நிச்சயமின்மை ஆகியவை வீரர்கள் வெளியேறுவதற்குக் காரணங்களாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

லிமான் உள்ளிட்ட பகுதிகளில் உக்ரைன் சில இடங்களை மீட்டுள்ளது. எனினும், பெரிய அளவில் தாக்குதல் நடத்த வீரர்கள் போதவில்லை. இதனால், போர்க்கள நிலவரத்தில் விரைவில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என ராணுவ ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

முந்தைய செய்தி
கொச்சிக்கு 40-க்கும் மேற்பட்ட கப்பல் ஆர்டர்கள் - மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்
அடுத்த செய்தி
பவானிசாகர் அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்வு

தொடர்புடைய செய்திகள்